நேபாளத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்க ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்தது. இதையடுத்து, இளைஞர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், சமூக ஊடக செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நேபாள அரசு நீக்கியது. மேலும், இளைஞர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சரும், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் அமைச்சரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக சர்மா ஓலி அறிவித்துள்ளார். தொடர்ந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த சர்மா ஓலி, அமைச்சர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் கலவரம் நீடித்து வருவதால் நேபாளத்தில் பாதுகாப்புக்கான பொறுப்பை அந்நாட்டு ராணுவம் ஏற்றுள்ளது.

