தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எளிய பின்னணியில் இருந்து மக்கள் எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர்கள் தங்களது தொகுதி மக்களுக்கான பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார். அரசு சார்பில் வழங்கப்படும் வாகனத்துக்கு ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் மாதந்தோறும் ரூ.75,000 வாகனப் படியாக வழங்கப்படும். மேலும், அலுவலகப் பணிகளில் உதவுவதற்காக ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ ஜோதிமணி, பல எம்எல்ஏக்களுக்கு சொந்தமாக வாகனம் இல்லாததால் தொகுதியில் நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதில் சிரமம் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், எம்எல்ஏக்களின் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள எம்எல்ஏக்களுக்கு உதவியாளர் தேவைப்படுவதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்குவதுடன், அதன் ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக மாதம் ரூ.75,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25,000 வழங்கப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உரிய அரசு ஆணைகள் வெளியிடப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

