அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எச்-4 (H-4) விசாவில் பணிபுரியும் உரிமையை ரத்து செய்வது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. அவர்களைச் சார்ந்து அமெரிக்காவில் வசிக்கும் கணவன் அல்லது மனைவி மற்றும் 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படுகிறது.முன்பு எச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதி கிடையாது. ஆனால், 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் மூலம், குறிப்பிட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் எச்-4 விசாதாரர்களின் துணைவர்கள் வேலை செய்வதற்கான அனுமதியைப் பெற முடிந்தது.இந்த வேலை அனுமதியைப் பெறுபவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக, எச்-1பி விசாதாரர்களின் மனைவிகள் இந்த அனுமதியைப் பெற்று அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில், எச்-4 விசாதாரர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளது. இதுதொடர்பான பரிந்துரையும் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்திலும் இதேபோன்ற நடவடிக்கை 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

