DD தமிழ் தொலைக்காட்சி நிலையம் இந்தி மாத கொண்டாட்டங்களை நடத்துவதால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தூர்தர்ஷனின் தமிழ் பிரிவு, “பொதிகை” என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்தது, ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் “டிடி தமிழ்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது மற்றும் லோகோவை காவி நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டதற்கான எதிர்ப்புகள் முன்பு இருந்து வந்தன . கடந்த ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார். தற்போது, சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நாளை நடைபெற உள்ளது. அக்டோபர் 18 அன்று நடைபெறும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்க உள்ளார்.இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில், “சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சி பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இடம்: தொலைக்காட்சி நிலைய அரங்கம்-1, 5, சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005. நாள்: அக்டோபர் 18 (வெள்ளிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி தற்போது டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அடையாளத்துடன் இந்தி திணிப்பு செய்வதாக அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனங்களை தற்போது தெரிவித்து வருகின்றன.

