காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல்-காசா இடையே போர் கடந்த 2023ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். போரை நிறுத்தவும், குறைந்தபட்சம் சில பணயக் கைதிகளை விடுவிக்கும், அமைதி திட்டத்தின் முதல்கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாசும் ஒப்புக்கொண்ட நிலையில். தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. காசாவின் பாதுகாப்பிற்கு அரபு நாடு மற்றும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த படையினர் அடங்கிய சர்வதேச படை பொறுப்பேற்கும் என்றும் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய மறுகட்டுமான பணிகளுக்கு அமெரிக்கா தலைமை வகிக்கும் என்று கூறப்படுகிறது.அனுமதி திரும்பியவுடன் காசா மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் டன் மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்கள் தயார்நிலையில் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமான பிரிவு தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இஸ்ரேலிய படைகள் போர் நிறுத்தத்தின் பின் வாபஸ்பெறப்பட்டு வரும் நிலையில், காசா மக்கள் கடும் சிதைவுக்குள்ளான தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த நிலையில் மக்கள் கொண்டாட்டம்.

