கேரளா திரையுலகில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து முதல்முறையாக மோகன் லால் பேசியுள்ளார்.
கேரளா திரையுலகில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து, நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குநர் ரஞ்சித், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளா நடிகர்கள் சங்கத்தின் AMMA (Association of Malayalam Movie Artists) நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் ஹேமா கமிட்டி வெளியான பிறகு, தனது கருத்தை முதல்முறையாக தெரிவித்துள்ளார் மோகன்லால். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. கேரளாவில் தான் இருக்கிறேன். மலையாள திரையுலகம் பாதிக்கப்படக் கூடாது என்று உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
மலையாள திரையுலகம் பாலிவுட் போன்று பிரமாண்டமானது அல்ல. கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது என கூறிய அவர், வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட போது AMMA நிர்வாகிகள் அனைவரும் உதவி செய்ததாகவும், இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியான பிறகு, AMMA நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தோம் என தெரிவித்தார்.
மேலும் இந்த பாலியல் புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இப்போது எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாது என்றும், எனக்கு தெரிந்தவற்றையெல்லாம் கூறிவிட்டேன் என்றும் இந்த விவகாரம் குறித்து கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும், இந்த விவகாரத்தில் புகார் அளிப்பவர்கள் சாட்சியர்களுடன் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

