சென்னை: தமிழகத்திற்கு விமானங்கள் மூலம் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2019 ல் கொரோனா பரவியதில் இருந்து உலக நாடுகள் பலவிதமான மாற்றங்களை அடைந்துள்ளது. பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2020 இல் உலக நாடுகளில் தீவிரமாக பரவிய கொரோனா தற்போது மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் உள்ளது.
இந்த நிலையில் சீனாவில் ஓமிக்ரானின் புதிய திரிபான பிஎப் 7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவிவருகிறது. இந்த புதிய உருமாற்ற வைரஸ் பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயை பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதலை அறிகுறிகளாக கொண்டுள்ளன.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், சுகாதாாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரு வேளை அந்த பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.