நாடளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி; மம்தா அறிவிப்பால் I.n.d.i.a கூட்டணிக்கு பெரும் பின்னடைவு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி உடைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியில் மிகத்தீவிரமாக இயங்கி வந்த மம்தாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அரசியல் கட்சிகள் அதற்கான தயாரிப்பை முன்னெடுத்து வருகின்றன. தொடர்ந்து 3வது முறையாக வெற்றிபெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் எப்படியாவது இந்த முறை பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என வியூகம் வகுத்து வருகின்றன.
கட்சி பாகுபாடுகளை மறந்து, பாஜகவை வீழ்த்துவதை மட்டுமே இலக்காக வைத்து, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கின. இந்த கூட்டணித் தலைவர்கள் இதுவரை 5 முறை ஆலோசனை நடத்திய நிலையில், ஆரம்பம் முதலே பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டாமல் இருந்தார் மம்தா பானர்ஜி.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில், மம்தாவிடம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக இடங்களை கேட்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 2 இடங்களை மட்டுமே தர முடியும் எனக் கூறிய மம்தா, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தையும் கொடுக்க முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது.
கடந்த தேர்தலில் தனித்து நின்றே 2 இடங்களை வென்றுவிட்ட நிலையில், கூட்டணியில் இருந்து கொண்டு வெறும் 2 இடங்கள் எதற்காக என காங்கிரஸ் கேட்டுள்ளது. இதனால், கோபமடைந்த மம்தா, அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சியின் போதும், மேற்கு வங்கத்தில் மத நல்லிணக்க பேரணியின் போதும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் குறிப்பிட்ட மாநிலங்களில் தொகுதி பங்கீட்டு பொறுப்பை மாநிலக் கட்சிகளிடம் விட்டுவிட வேண்டும் என்றும், பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி 300 இடங்களில் கூட தனித்து போட்டியிடலாம் என்றும் கூறினார். பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்றும், பாஜகவை எதிர்த்து போராட முடியாவிட்டால், தொகுதியையும் கேட்காதீர்கள் என்றும் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை வைக்க பரிந்துரை செய்ததே நான் தான் என்றும், ஆனால், கூட்டத்தில் பங்கேற்கும்போது இடதுசாரிகள் தன்னை கட்டுப்படுத்த நினைப்பதாகவும் கொந்தளித்தார். இதனால், இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா வெளியேறுவதற்கு தயாராகிவிட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்க வழியாக ராகுல் காந்தி நடத்தும் யாத்திரை குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மம்தா இல்லாமல் இந்தியா கூட்டணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடுவோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி உடைந்து விட்டதாக விமர்சித்துள்ள பாஜக, மம்தா பானர்ஜியின் இந்த முடிவு எதிர்பார்த்ததுதான் என்றும் கூறியுள்ளது. இதனிடையே, பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, மம்தா தனித்துப் போட்டி என அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் இவ்வாறு முடிவெடுத்து இருப்பதால், தேர்தலுக்கு முன்பே இந்தியா கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *