அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. Institute of International Education (IIE) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2025–26 கல்வியாண்டில் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்து 11.46 லட்சமாக உள்ளது. அதேபோல், புதிதாகச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் சரிந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்து 3,39,435 ஆக உள்ளது. முதுநிலைப் படிப்புகளில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் படிப்பை முடித்த பிறகு வேலை கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவை இந்தச் சரிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அமெரிக்கா இந்திய மாணவர்கள் அதிகம் விரும்பும் வெளிநாட்டுக் கல்வி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவது அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்களுக்கும், வெளிநாட்டு மாணவர்களை நம்பியுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
