இஸ்ரோ அறிவித்ததன்படி, கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட CMS-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம்-3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை 48 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் அனுப்பியுள்ளது. 2013ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைவதால், அதற்குப் பதிலாக சுமார் ₹1,600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அதிநவீன CMS-03 செயற்கைக்கோள் தற்போது தயாராகியுள்ளது.இந்த செயற்கைக்கோள் 4,400 கிலோ எடையுடையது என்பதால், இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்டதாகும். இதில் மல்டி-பேண்ட் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன.இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு பணிகள், கடலோர எல்லை பாதுகாப்பு, போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் பயன்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

