சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலங்களை உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள 70 பூங்காக்களில், மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில், வாசிப்பு மண்டலங்களை அமைக்க கூரை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் (Reading zone) உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கூடுதலாக பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 300 பூங்காக்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வகையில், அவற்றை பழுதுபார்க்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியில் 10 முக்கிய பூங்காக்களை தேர்ந்தெடுத்து, அனைத்து வகையான பார்வையாளர்களுக்கேற்ப, குறிப்பாக பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய உபகரணங்களை உள்ளடக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
