ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி – ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர்.
5ஆவது ஓவரில் டு பிளெஸ்ஸிஸ் 17 ரன்களில் வெளியேறினார். 8ஆவது ஓவரில் 33 ரன்களுக்கு கோலியும் அவுட் ஆனார். அடுத்து கேமரூன் கிரீன் – ரஜத் படிதார் கைகோத்து ஆட்டத்தை நகர்த்திச் சென்றனர். 13ஆவது ஓவரில் கேமரூன் 27 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் அதே ஓவரில் டக் அவுட்டானார்.
ரஜத் படிதாரும் நிலைக்காமல் 34 ரன்களில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் மஹிபால் லோமரோர் – தினேஷ் கார்த்திக் நிதானமாக ஆடினர். எனினும் ஆவேஷ் கான் வீசிய 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 11 ரன்களிலும், மஹிபால் 32 ரன்களிலும் நடையை கட்டினர்.
இப்படியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 172 ரன்களைச் சேர்த்தது.
173 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓப்பனர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர் ஆடினர். 20 ரன்களுடன் டாம் கோஹ்லர் நடையை கட்டவே, 9வது ஓவர் வரை நிதானமாக ஆடிய யஷஸ்வி 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். கேமரூன் கிரீன் வீசிய பந்தை தினேஷ் கார்த்திக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்கள், ரியான் பராக் 36 ரன்கள், துருவ ஜுரேல் 8, ஹெட்மயர் 26, பவல் 16 என 19 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி 174 ரன்கள் குவித்து ஆர்சிபி அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாடும். அந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.