இந்தியாவில் இன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது. அரிய வானியல் நிகழ்வான blood moon நிகழ்வு தோன்றியுள்ளது. இந்நிகழ்வில் நிலா இளஞ்சிவப்பு வண்ணத்தில் தெரியத் தொடங்கியுள்ளது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இதன் காரணமாக, நிலவு, சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இது மிகவும் அரிய சந்திர கிரகணம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, சீனாவில் இந்தச் சந்திர கிரகணம் முழுமையாகத் தெரியும்.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பகுதியில் தெரியும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று (7ஆம் தேதி) இரவு 8.58 மணி முதல் இரவு 11 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. மேலும், சந்திர கிரகணம் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணி வரை நிகழ இருக்கிறது. இன்று ஏற்பட்டுள்ள சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பொதுமக்கள் பார்க்கலாம்.
இருந்தாலும், அதனை இன்னும் தெளிவாகவும், துல்லியமாகவும் காண்பதற்காக பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தை உலகத்தில் உள்ள 77 சதவீத மக்கள் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

