தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக எதிர்பாராத முறையில் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முக்கிய முன்னிலை பெற்றுள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் திரு.ராஜேந்திர அர்லேகர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தவெக பெரும்பான்மைக்கு நெருக்கமாக இருப்பதால், பிற கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஆளுநருக்கு கடிதம் அளித்து, இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்கள் மு.க. ஸ்டாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதுடன், புதிய அரசு அமையும் வரை அவர் மற்றும் அவரது அமைச்சரவை பதவியில் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

