தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேர்தல் ஏற்பாடுகள் சீராக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.தேர்தல் செயல்முறைகள், வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்குச்சாவடி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பணப் பரிவர்த்தனை கண்காணிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசிப்பார். தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.மேலும், மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.), வருமான வரித்துறை மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகாரிகளுடனும் அவர் சந்திப்பு நடத்தவுள்ளார். தேர்தல் காலத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பொருள் விநியோகம் மற்றும் விதிமுறைகள் மீறல் போன்றவற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

