கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் திருவண்ணாமலையில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலில் கூடி இருக்கும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்கியபடி முழக்கமிட்டது திருவண்ணாமலை எங்கும் எதிரொலித்தது.
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்கு போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீடுகளின் முன்பும் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலை நகரம் முழுவதுமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. கண்ணைக்கவரும் வான வேடிக்கைகளும் நடைபெற்றன. நகரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகள் பொறுத்தப்பட்டிருந்தன. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.