உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.v
கடந்த 2006 – 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து, 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நேற்று முன் தினம் விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திருப்பது நிரூபணமாகியுள்ளதாகவும், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து கருத்து கேட்பதற்காக, இருவரும் இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அதன் படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தொடர்ந்து தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்டவுடன் பொன்முடியின் மனைவி விசாலாட்சி கதறி அழுதுள்ளார்.
தண்டனை 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பொன்முடியும் அவரது மனைவியும் உடனே சிறை செல்லமாட்டார்கள். தண்டனையை குறைக்க வேண்டும் என மனைவி விசாலாட்சி கோரிக்கை விடுக்க, அதற்கு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

