ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்தின் மத்தியில், அந்த நாட்டின் புதிய உச்ச தலைவராக முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் மீது நடத்திய கடுமையான ராணுவ தாக்குதல்களில் பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முன்னாள் உச்ச தலைவர் கமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே மற்றும் ஈரான் புரட்சிகர ராணுவத்தின் பல உயர்மட்ட தளபதிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஈரானில் அரசியல் சூழ்நிலை மிகவும் பதற்றமாக மாறியுள்ளது.இந்த சூழ்நிலையில் நாட்டின் நிர்வாகத்தை தற்காலிகமாக நடத்துவதற்காக அயதுல்லா அலிரேசா அராபி இடைக்கால ஆட்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஈரானின் அரசியலமைப்புச் சட்டப்படி புதிய உச்ச தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இந்த இடைக்கால கவுன்சில் நாட்டை வழிநடத்தும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 56 வயதான முஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் பல ஆண்டுகளாகவே தந்தையின் அரசியல் வாரிசாக பார்க்கப்பட்டு வந்தார். முஜ்தபா கமேனியின் தலைமையில் ஈரான் தனது பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றும், அமெரிக்கா-இஸ்ரேல் உறவுகள் மேலும் பதற்றமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

