சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு மூன்று கோப்பைகளை வென்று தந்த கேப்டன் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்று தோனி அணியை வழிநடத்தினார். ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் தோனி தற்போது சொந்த ஊரான ராஞ்சியில் தனது பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் கேப்டன் கூல் வாசகத்தை டிரேட்மார்க் ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார்.
இதன் மூலம், தோனி தனது பிராண்ட் அடையாளத்தை பாதுகாக்கவும், வணிக வாய்ப்புகளை விரிவாக்கவும், குறிப்பாக விளையாட்டு பயிற்சி, ஆடை, மற்றும் டிஜிட்டல் துறைகளில் தனது பெயரைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
தோனி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை இந்திய டிரேட்மார்க் பதிவேட்டு ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையில் அது குறித்த விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது. அதேநேரம், கேப்டன் கூல் வாசகத்திற்கு தோனி டிரேட்மார்க் அங்கீகாரம் பெறுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதுகுறித்து நான்கு மாதங்களுக்குள் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
	

 
						 
						