கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவம்; சதிச் செயலாக இருக்கக் கூடும் என என்ஐஏ விசாரணை

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள்

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கவரைப்பேட்டை அருகே நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம்புரண்டன. அதில், 3 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து கடும் சேதத்தை சந்தித்தன. இந்த விபத்தில் பயணிகள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், அதில் 3 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த கும்மிடிப்பூண்டி – சென்னை வழித்தடத்தில் செல்ல இருந்த மற்ற ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. 5 ராட்ச கிரேன்கள், இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், தடம் புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. சுமார் 250 ரயில்வே ஊழியர்கள், 100 தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஒப்பந்த ஊழியர்கள் 150 பேர் என மொத்தம் 500 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தண்டவாளத்தில் விழுந்த 7 பெட்டிகளில் 5 பெட்டிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு பெட்டிகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதேபோன்று சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலைலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு சதி செயல் காரணமா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கவரைப்பேட்டையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் தேசிய புலனாய்வு முகமையினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
ரயில் விபத்து தொடர்பாக, 13 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதாவது, கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் எனப்படும் ஓட்டுநர் சுப்பிரமணியன் உட்பட ரயில்வே ஊழியர்கள் 13 பேரிடம் அதிகாரிகளை விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே, கவரைப்பேட்டை ரயில் விபத்திற்கு சிக்னல் பிரச்னை காரணம் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்மதி விரைவு ரயில் பெட்டிகளின் கட்டுமான அமைப்பே, விபத்து நேர்ந்த போது உயிரிழப்புகளை தடுத்ததாக ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக விளக்கம் அளித்துள்ளார். ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இலகுரக ரயில்பெட்டியால் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருப்பதாகவும், கேப்சூல் போன்ற வடிவமைப்பில் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *