லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான 21 வயது அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 37 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார். வலது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து ஐந்து வாரங்களுக்குப் பிறகு கலந்து கொண்ட ஜோகோவிச்சுக்கு, இளம்புயல் அல்கராஸ் பெரும் சவாலாக களமாடினார்.
மூன்றாவது செட்டிலும் முன்னிலை பெற்ற அல்கராஸ், ஒரு கட்டத்தில் சாம்பியன்ஷிப் பாயின்ட்டை எட்டி வலுவான நிலையில் இருந்தார். எனினும், கடுமையாக போராடிய ஜோகோவிச், அந்த செட்டை டை-பிரேக்கர் வரை கொண்டு சென்றார். இறுதியில், இரண்டு மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த இந்தப்போட்டியில், வென்ற அல்கராஸ், விம்பிள்டன் பட்டத்தை மீண்டும் வசப்படுத்தினார்.
41 நிமிடங்கள் நீடித்த முதல் செட் ஆட்டத்தில் அல்கராஸால், ஜோகோவிச் எட்டு முறை வலைக்கு அருகே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் முதல் செட்டை 6க்கு 2 என நேர் செட்டில் வென்று அசத்தினார். இரண்டாவது செட்டில் அதே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அல்கராஸ், 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியும், வேல்ஸ் இளவரசியுமான காத்திரீன் விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் கார்லோஸ் அல்கராஸுக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார். இறுதிப் போட்டிக்கு வந்தாலே வெற்றி தான் என அசத்தும் அல்கராஸ், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தான் விளையாடி 4 இறுதிப் போட்டிகளிலும் கோப்பை வென்றுள்ளார். இந்த சாதனையை ஜாம்பவான் ரோஜர் பெடரருக்கு பிறகு எட்டிய, இரண்டாவது வீரர் பெருமையையும் அல்கராஸ் பெற்றுள்ளார்.