மாநில அரசின் அனுமதியில்லாமலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க அனுமதி கோரி மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெறாமல் நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா?” என மாநிலக் கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் மாநில அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கருதப்படும். பின்னர், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு இணைப்பு வழங்குவதற்குப் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்குத் தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

