ஒரு காலத்தில் மாவோயிஸ்ட்டாக ஆயுத போராட்டம் நடத்திய தன்சாரி அனஸ்யா சீதாக்கா, தற்போது தெலங்கானா மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் நாயகர் முதலமைச்சர் ரேவந்த் என்று பலரும் நினைத்திருந்த வேளையில், பதவியேற்பு விழாவின் நாயகியாக உருவெடுத்தார் அமைச்சர் தன்சாரி அனஸ்யா. பதவி ஏற்பு உறுதிமொழி வாசிப்பதற்காக மைக் முன்பு சீதாக்கா வந்து நின்ற போது, தொடங்கிய ஆர்ப்பரிப்பு அந்த மைதானத்தையே அதிர வைத்தது. அவர் பேசவே முடியாத அளவுக்கு அங்கிருந்த மக்கள் ஆரவாரத்தில் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
இப்படி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள சீதாக்கா , 14 வயதில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட், 24 வயதில் வழக்கறிஞர், 41 வயதில் முனைவர் பட்டம், 52 வயதில் அமைச்சர் என படிப்படியாக முன்னேறி சிகரத்தை எட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக ஆயுத போராட்டத்தை தொடங்கிய சீதாக்கா, தற்போது அமைச்சராக அவர்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றவுள்ளார்.

