பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் தான்.
பிக்பாஸ் தமிழ் 9வது சீசனில் இதுவரை நடக்காத நிகழ்வாக ஒரே நேரத்தில் இருவர் ரெட் கார்டு கொடுத்து போட்டியாளர்களான பார்வதி மற்றும் கம்ருதீன் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரெட் கார்டு விதியால் இவர்கள் இருவருக்கும் கிடைக்கப்போகும் ஊதியம் என்ன தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘ரெட் கார்டு’ என்பது ஒரு போட்டியாளர் விதிமுறைகளை மீறும்போதோ அல்லது வன்முறையில் ஈடுபடும்போதோ, அவருக்கு வழங்கப்படும் ஒரு தண்டனை ஆகும். ரெட் கார்டு பெற்றால், அந்தப் போட்டியாளர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார். பிக் பாஸ் வீட்டின் மிக முக்கியமான விதிகளான உடல் ரீதியான வன்முறை அல்லது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை ஒரு போட்டியாளர் மீறினால், நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுவார்.
இது சாதாரண எவிக்ஷன் கிடையாது; இது ஒரு தண்டனை. பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் தான். இதற்கு முன்னதாக சீசன் 2-ல் சக போட்டியாளர்களை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக நடிகர் மகத் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டார். அதன்பின் பெண்களை அவதூறாகப் பேசியதற்காக சீசன் 3-ல் நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டார்.
கிட்டத்தட்ட அதே போன்றொரு புகாரில் சீசன் 7-ல் நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். எனினும் ஒரே நேரத்தில் இருவர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டது இதுவே முதல்முறை. அதிலும், வி.ஜே. பார்வதிதான் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் ரெட் கார்டு பெற்று வெளியேறிய முதல் பெண் போட்டியாளர். ‘டிக்கெட் டு ஃபினாலே’ கார் டாஸ்க்கின் போது, சக போட்டியாளர் சான்ட்ராவை பாரு மற்றும் கம்ருதீன் சேர்ந்து காலால் எட்டி உதைத்து காரிலிருந்து கீழே தள்ளினர். இதில் சான்ட்ராவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, வன்முறையை அனுமதிக்க முடியாது என்று கூறி இருவரையும் ரெட் கார்டு மூலம் வெளியேற்றினார். ரெட் கார்டு வாங்கி வெளியேறுபவர்களுக்குச் சில கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.
ரெட் கார்டு பெற்றால் சம்பளம் கிடையாது என்பது பிக் பாஸ் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு பொதுவான விதி என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது எங்குமே அதிகாரப்பூர்வமாகப் பதிவாகவில்லை. பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் லட்சத்தில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரெட் கார்டு என்பதால் அந்தச் சம்பளம் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
மேலும், எவிக்ஷன் மூலம் வெளியேறுபவர்களைப் போல ரெட் கார்டு மூலம் வெளியேறுபவர்கள் மேடைக்கு அழைத்து கௌரவிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் நடக்கும் ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்துகொள்ள முடியாது.

