துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய தேஜஸ் போர் விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டதால், விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.நேற்று துபாயில் நடந்த சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகசப் பயிற்சி காட்டியபோது தேஜஸ் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பற்றி எரிந்தது. இந்த பயங்கர விபத்தில், விமானி இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன் சியால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிகழ்ச்சி பார்த்தவர்கள், விமானம் உயரத்தில் இருந்து திடீரென நேராக கீழே விழுந்து சிதறியது, கரும்புகை வானம் முழுவதும் பரவியது என்று தெரிவித்தனர்.ஓய்வுபெற்ற விமானப் பாதுகாப்பு நிபுணர் கேப்டன் அனில் கவுர், “சாகசப் பறப்பில் அதிகமான ஜி-போர்ஸ் காரணமாக விமானி மயக்கம் அடைந்திருக்கலாம். விமானிகள் அணியும் ஜி-சூட் உடையில் கோளாறு இருந்தாலும் இத்தகைய நிலை உருவாகும். இருப்பினும், காக்பிட் தரவு பதிவுகளை ஆய்வு செய்த பிறகே முழு காரணம் உறுதியாகும்,” என்றார். துணிச்சலான விமானியை இழந்தது மிகுந்த துயரமெனவும் அவர் கூறினார்.இந்திய விமானப்படை, நமன் சியால் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தை அறிய உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பிழை, இயந்திரக் கோளாறு உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், மீட்பு குழுவினர் விமானத்தின் முக்கிய கருவியான கறுப்பு பெட்டியை கண்டுபிடித்து சேகரித்துள்ளனர். இதில் பறப்பின் அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் ப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) மற்றும் காக்பிட் உரையாடல் பதிவு கருவி (CVR) ஆகியவை அடங்கும்.இந்த இரண்டு கருவிகளும், விபத்து நேருவதற்கு முன் விமானத்தில் என்ன நடந்தது, விமானியும் கட்டுப்பாட்டு அறையும் இடையே என்ன பேச்சு நடந்தது போன்ற முக்கிய தகவல்களைத் தருகின்றன. எனவே, கறுப்பு பெட்டி மீட்பு விசாரணைக்கு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

