வட இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானிலும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தரமற்ற எரிபொருளின் பயன்பாடு, குப்பைகள் மற்றும் பயிர்கழிவுகளை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை, கட்டுமானப் பணிகள் மூலம் பரவும் தூசிகள் ஆகியவை காற்று மாசுபாட்டின் முக்கிய காரணங்களாக உள்ளன.காற்றின் தரத்தை அளவிடும் ஏகியூஐ (Air Quality Index) 0 முதல் 50 வரை இருந்தால், அது நல்ல தரமாகக் கருதப்படுகிறது. 51-100 என்ற அளவுக்கு திருப்தியான தரம், 101-200 என்ற அளவுக்கு பரவாயில்லை, 201-300 என்ற அளவுக்கு மோசமானது, 301-400 என்ற அளவுக்கு மிக மோசமானது, 401-450 என்ற அளவுக்கு தீவிரமானது, 450-க்கு மேல் என்றால் மிக தீவிரமானதாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது.பாகிஸ்தானின் லாகூரில் ஏகியூஐ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1,900 ஆக உயர்ந்தது, இது முந்தைய காலங்களில் காணாத அளவாகும். 1.40 கோடி மக்கள் வாழும் லாகூரில் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை 6 மடங்கு மீறியுள்ளது. இதன் மூலம், லாகூர் உலகின் மிகுந்த மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. அதே நேரத்தில், டெல்லியில் ஏகியூஐ 276 ஆக இருந்தது, எனவே லாகூர், டெல்லியை விட 6 மடங்கு அதிகமாக மாசுபட்டதாகக் கூறலாம். இந்நிலையில், பஞ்சாப் அமைச்சர் மரியம் அவுரங்கசீப், மக்கள் வீட்டில் இருக்க வேண்டும், ஜன்னல்களை மூட வேண்டும் மற்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், காற்று மாசுபாட்டை குறைக்க ரிக் ஷாக்களை இயக்குவதற்கு அரசு தடை விதித்தது மற்றும் சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது.பாகிஸ்தான், அண்டை நாடான இந்தியாவில் இருந்து வரும் மாசுபட்ட காற்றின் காரணமாக நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர்அன்வர் கூறுகையில், “இந்தியாவின் கிழக்குப் புறத்திலிருந்து வரும் காற்றால் லாகூரில் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இதற்காக யாரையும் குற்றம் சாட்டுவதில்லை, இது இயற்கையின் ஒரு நிகழ்வாகும். இருப்பினும், இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் உரையாட விரும்புகிறோம். இதற்கான கடிதம் எழுத திட்டமிட்டுள்ளோம்” என்றார்.