நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி

நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் நாளை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, நாட்டின் ராணுவ வல்லமை மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் கண்கவா் அணிவகுப்பு நடைபெறும்.
குடியரசு தினத்துக்கு முன்னதாக இன்று மாலை 7 மணிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரை, தூா்தா்ஷன் சேனல்கள் மற்றும் ஆகாசவாணியில் ஹிந்தியில் ஒளி-ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இன்று அவரது உரையில், “குடியரசு தினம் என்பது உண்மையில் அனைத்து குடிமக்களையும் இணைக்கும் மகிழ்ச்சியான பெருமைக்குரிய தினமாகும்.
நீண்டகாலமாக செயலற்று கிடந்த இந்தியாவின் ஆன்மா மீண்டும் விழித்தெழுந்து, மற்ற நாடுகளின் நட்புறவில் அதன் சரியான இடத்தை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் நேரம் இது.
பண்டைய காலங்களில் இந்தியா அறிவு மற்றும் ஞானத்திற்கான ஆதாரமாக அறியப்பட்டது. இருப்பினும், ஒரு இருண்ட காலகட்டம் வந்தது. காலனித்துவ ஆட்சியின் மனிதாபிமானமற்ற சுரண்டலால் நம் நாடு மிகக் கொடுமையான வறுமை நிலைக்குச் சென்றது.
அந்நியர்களின் ஆட்சியின் கட்டுபாட்டிலிருந்து தாய்நாட்டை விடுவிக்க பெரும் தியாகங்களைச் செய்த துணிச்சலான ஆன்மாக்களை நாம் நினைவு கூற வேண்டும்.
இந்த ஆண்டு பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம். நாட்டின் வரலாற்றில் தங்கள் பங்களிப்பை உண்மையாக முழுவதும் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிரதிநிதியாக அவர் நிற்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட நாடு தழுவிய சுதந்திரப் போராட்ட இயக்கங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் அரசியலமைப்பு நம்மை வழிநடத்தி வருகிறது. சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சபையின் பிற புகழ்பெற்ற உறுப்பினர்கள், அதனுடன் தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் ஆகியோர் கடினமாக உழைத்து இந்த அற்புத ஆவணத்தை நமக்கு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்,” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
குடியரசு தினத்தையொட்டி காவல்துறையினருக்கான விருதுகளை அறிவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஜி. துரை குமார் மற்றும் ராதிகா ஆகியோருக்கு மெச்சத்தகுந்த பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பணிக்கான குடியரசு தலைவர் விருதுகள் 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *