தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு கேரளாவில் பாராட்டு விழா; முதல்வர் கலந்துகொண்டார்

ஆளுமை/விருது இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா சின்னத்திரை செய்திகள் நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ‘மலையாளம் வானோலம் லால் சலாம்’ விழா நடந்தது; பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய நடிகர் மோகன்லால், “தாதா சாகேப் பால்கே விருதை பெற்றபோது இதற்கு முன்பு கௌரவிக்கப்பட்டவர்களை நினைத்து பார்த்தேன். மேலும் இந்திய சினிமாவுக்கு தாதா சாகேப் பால்கே ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைத்தேன். நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் முக்கியமானது. காரணம், இது கேரள மலையாளிகளிடமிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமிருந்தும் எனக்கு கிடைத்துள்ளது. என்னுடைய திரைப்பயணம் முழுவதும் அரசு எனக்கு உறுதுணையாகவே இருந்துள்ளது. பார்வையாளர்கள் இல்லாவிட்டால் என்னால் எதையும் சாதித்து இருக்க முடியாது. அவர்களுக்கான அங்கீகாரம் இது. எனக்கு ஆதரவளித்த எனது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
புது டெல்லியில் இந்த விருதை பெறும்போது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ அதைவிட எமோஷனலாக இந்த இடத்தில் உணர்கிறேன். காரணம் திருவனந்தபுரம் எனது சொந்த நகரம். நான் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். சினிமா குறித்த எந்த அறிவும் இல்லாமல், நானும் எனது நண்பர்களும் சேர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட என்னுடைய ஆரம்ப நாட்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு நடிகர் என்பவர் களிமண் போன்றவர். அவருக்கான வடிவத்தை கொடுப்பது இயக்குநர்களும், திரைக்கதை ஆசிரியர்களும், கேமராமேன்களும் தான். நான் வெற்றிகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளேன். இரண்டையும் சமமாகவே ஏற்றுக்கொண்டேன்.
நான் செல்லும் பாதையில் எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் ரசிகர்களின் ‘லாலேட்டா’ என்ற குரல் சினிமாவுக்கு உண்மையாக இருக்கிறேனா? சரியான திசையில் செல்கிறேனா என்பதை யோசித்து பார்க்க சொல்கிறது. ஒவ்வொரு கலைவடிவமும் காலப்போக்கில் பரிணமித்துள்ளது. இந்த பரிணாம வளர்ச்சியில் தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *