லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது; கூலி என பெயரிடப்பட்டுள்ளது

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171 ஆவது படத்துடைய டைட்டில், 3 நிமிட டீசருடன் வெளிவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரஜினி – லோகேஷ் இணையும் படத்திற்கு அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 71 வயதாகும் ரஜினிகாந்த் இன்றளவிலும் அயராது தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. 600 கோடி வரை இந்த படம் வசூல் வேட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்திற்கு பின் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் முடிந்துவிட்டதாக ரஜினிகாந்த் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘கூலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கூலி படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #Coolie என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *