மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர நிறைவில் 803 புள்ளிகள் அதிகரித்து 64,718 ஆகவும், அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தக நேர நிறைவில் 216 புள்ளிகள் அதிகரித்து, 19,189 ஆகவும் இருந்தது.
இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வரலாற்று உச்சம் தொட முக்கிய காரணமாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுவது, கடந்த 7 மாதங்களாக சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தது. அதிகபட்ச வட்டி, அதிகபட்ச பணவீக்கம் காணப்பட்டது. தற்போது, நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான பொருளாதார காரணிகள் தென்படுகின்றன.
எதிர்பார்த்ததை விட காலாண்டில் பொருளாதார செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. வெளிநாட்டு மூலதனம் அதிகரிப்பு, உள்நாட்டு சில்லறைகள் முதலீட்டாளர்கள் செயல்பாடு அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தைகளில் அதிகரித்து வரும் பொருளாதார நம்பிக்கைகள் போன்ற காரணிகளால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்று உச்சத்தை தொட்டது என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 2.36 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 296.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் மட்டும் இந்நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 12.35 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.