இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இயற்கை காரணங்களால் மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 111 புலிகள் இறந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 90 புலிகள் மற்றும் கேரளாவில் 28 புலிகள் உயிரிழந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, 2019-ம் ஆண்டில் 96 புலிகள், 2020-ம் ஆண்டில் 106 புலிகள், 2021-ம் ஆண்டில் 127 புலிகள், 2022-ம் ஆண்டில் 121 புலிகள் மற்றும் 2023-ம் ஆண்டில் 178 புலிகள் இறந்துள்ளன. புலிகளின் இறப்பு 2012-க்குப் பிறகு 2023-ம் ஆண்டில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.மத்திய அரசு புலிகளின் மேம்பாட்டுக்காக, ஏப்ரல் 1, 1973-ம் ஆண்டில் இந்திய புலிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இது 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பில் 2.4 சதவிகிதமாகும். மேலும், காப்பகங்களுக்கு வெளியே உள்ள புலிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதற்குத் தீர்வு காணும் வகையில் புதிய திட்டம் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

