அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள், யூத அருங்காட்சியத்தின் அருகே மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், வாஷிங்டனில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அலுவலகத்திற்கு அருகிலேயே நடந்ததால், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு தூதரக ஊழியர்களின் கொலை தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சிகாகோவில் உள்ள ரோட்ரிக்ஸ் எனப்படும் என்று கூறப்படுகிறது. அருங்காட்சியத்துக்கு வெளியே பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என முழக்கமிட்டவரை காவல்துறையினர் கைது செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய தூதர் டேனி டானன், இந்த தாக்குதலை ‘யூத எதிர்ப்பு பயங்கரவாதம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அவர், குற்றவாளிகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள் தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கொலை நடந்த இடத்தை அமெரிக்க அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

