இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜூலை 8ம் தேதிக்குள் கையெழுத்திடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரியை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு, அதாவது வரும் ஜூலை 9ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பரஸ்பர வரியை தவிர்க்க அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்கா சென்று, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் 4 நாள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து அதிகாரிகள் கூறியதாவது, ‘பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 8ம் தேதிக்குள் இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க முயற்சிக்கிறோம். இதில் 26 சதவீத கூடுதல் வரியும், 10 சதவீத அடிப்படை வரியும் இந்தியாவுக்கு இருக்கக் கூடாது என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றார்.

