தனது மனைவி நடாஷாவை பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்துள்ளார். இந்த பிரிவு குறித்து இருவரும் பரஸ்பரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்த தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. ஹர்திக் பாண்டியாவும் செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், 2020ம் ஆண்டு கொரோனா லாக்டவுனின் போது இருவரது திருமணமும் எளிமையாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த நடாஷா, ஜூலை 30 ஆம் தேதி அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தம்பதி அகஸ்தியா என பெயரிட்டிருந்தனர்.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இருவரும் தனது மகன் அகஸ்தியா முன்பாக மீண்டும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்னர் இருவரும் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
ஹர்திக் பாண்ட்யா – நடாஷா இடையிலான உறவு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரியவுள்ளதாக தகவல்கள் பரவின. இதை இரு தரப்பும் உறுதி செய்யாத நிலையில், ஹர்திக் பாண்ட்யா பல முக்கிய நிகழ்வுகளில் குறிப்பாக ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் சிங்கிளாக கலந்து கொண்டார்.
முன்பு சாதாரண நிகழ்ச்சிகளிலும் மனைவியுடன் ஹர்திக் பங்கேற்ற நிலையில் இந்த மாற்றம் பல யூகத்திற்கு வழி வகுத்தது. இந்த நிலையில் மனைவி நடாஷாவை பரஸ்பரம் பிரிவதாக ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
