வங்கதேச நாடாளுமன்றத்திற்கு கடந்த 12ம் தேதி 13வது பொதுத் தேர்தல் நடந்தது. இதில், 297 இடங்களில் 209 இடங்களில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு நெருக்கமான வலதுசாரி ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி 68 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.
முன்னதாக, பிஎன்பி கட்சியின் நாடாளுமன்ற தலைவராக தாரிக் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வங்கதேசத்தின் புதிய பிரதமராக அவர் பதவியேற்றார். வங்கதேச அதிபர் முகமது ஷாஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தாரிக் ரஹ்மானுடன் 25 அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். பிரதான எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி, பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது.
பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பங்கேற்றனர். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, பாகிஸ்தான் அமைச்சர் அஹ்சன் இக்பால், நேபாள வெளியுறவு அமைச்சர் பாலா நந்த சர்மா மற்றும் இலங்கை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்தா ஜெயதிஸ்ஸா உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
கடந்த 2024ல் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு, தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நிர்வாக பொறுப்பேற்றது. யூனுஸ் தலைமையிலான 18 மாத ஆட்சியில் இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவு சீர்குலைந்தது. தற்போது தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து இடைக்கால அரசு முடிவுக்கு வந்துள்ளது.
17 ஆண்டு நாடு கடத்தலுக்கு பிறகு பிரதமரான தாரிக்
பிஎன்பி கட்சியின் நிறுவனரும் ராணுவ ஆட்சியாளருமான ஜியாவுர் ரஹ்மானின் மகன் தாரிக் ரஹ்மான் (60). 1981ல் ஜியாவுர் படுகொலைக்குப் பிறகு அவரது மனைவியான கலீதா ஜியா கடந்த 40 ஆண்டாக கட்சியை வழிநடத்தி வந்தார். முன்னாள் பிரதமரான கலீதா ஜியா சமீபத்தில் வயது மூப்பால் காலமானார். 1965 நவம்பர் 20ல் டாக்காவில் பிறந்தவர் தாரிக் ரஹ்மான்.
சிறு வயதிலேயே 1971ல் வங்கதேச விடுதலை போராட்டத்தில் தனது தாய் கலீதா ஜியாவுடன் கைது செய்யப்பட்டார். பின்னர் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசதம் விடுதலை பெற்ற பிறகு 1971 டிசம்பரில் விடுதலை ஆனார். டாக்கா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த இவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு தொழில் செய்யத் தொடங்கினார். 2009ல் கட்சியின் துணைத்தலைவரானார். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் ஆட்சியில் தாரிக் ரஹ்மான் கடுமையாக குறிவைக்கப்பட்டார்.
பல ஊழல், குண்டுவெடிப்பு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது. அதில் ஆயுள் தண்டனை பெற்ற தாரிக் 2008ல் மருத்துவ காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியவர் லண்டனில் தஞ்சமடைந்தார். ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் 17 ஆண்டுக்குப் பின் தாய்நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் முதல் முறையாக பிரதமர் ஆகி உள்ளார். அவர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

