அருணாச்சலில் 27 இடங்களுக்கு பெயர் பதிவு: இந்தியாவை கடுமையாக சாடிய சீனா

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு சீனா செய்திகள்

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களின் அடையாளப் பெயர்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் பதிவு செய்துள்ளது. இதில் நிலப்பகுதிகள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தியா–சீனா எல்லைப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு சீனா தொடர்ந்து புதிய பெயர்களை வழங்கி வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘தி குளோபல் டைம்ஸ்’ இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் நடவடிக்கை எல்லைப் பகுதியில் நிலவும் சூழலை மேலும் சிக்கலாக்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இது உதவாது என்றும் சீன நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கியான் ஃபெங் கூறுகையில், சீனா எல்லைப் பகுதிகளில் புவியியல் பெயர்களை மாற்றும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கொண்டுள்ள இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கை எல்லைப் பிரச்னையை மேலும் மோசமாக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஷாங்காய் சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழக பேராசிரியர் குவா சீதாங் கூறுகையில், இந்தியா 27 இடங்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருப்பதால் சட்ட ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படாது என்றும், இது நிர்வாக ரீதியான நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்னைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.112 இடங்களுக்கு பெயர் மாற்றிய சீனாகடந்த 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆறு கட்டங்களாக அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், கணவாய்கள், ஆறுகள் மற்றும் மலைச் சிகரங்கள் உள்ளிட்ட சுமார் 112 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த நிலையில், கடந்த மாதம் அருணாச்சலப் பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதனால் இந்தியா–சீனா இடையிலான எல்லைப் பிரச்னை மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *