நமது துயரங்களைப் போக்க வரும் சிவராத்திரி – மார்ச் 11 .

செய்திகள்

சிவனடியார்கள் எல்லோரும் மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விசேஷ நாளான சிவராத்திரி வருகின்ற மார்ச் 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

முக்தி அடைய வேண்டுமென்றால் மனிதனாகத்தான் பிறக்க வேண்டும். அப்படி மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சிவபெருமானை சரணாகதி அடைந்து முக்தி அடைய விசேஷ நாளாக கருதப்படுவது சிவராத்திரி.

இந்த சிவராத்திரி திருநாளை கொண்டாட இரு வேறு காரணங்கள் முக்கியமாக கூறப்படுகிறது.

பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுக்க தேவர்களும் அசுரர்களும் மகாவிஷ்ணுவின் தலைமையில் மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டார்கள். அப்போது முதலில் வந்தது ஆலகால விஷம். அந்த விஷத்தின் நெடி பலரை மயக்கமுற செய்தது. அந்த ஆலகால விஷத்தை அப்புறப்படுத்த அனைவரும் பரமேஸ்வரனின் உதவியை நாடினார்கள்.

அவர்களின் விண்ணப்பத்தை ஏற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை அப்படியே குடித்தார்.

உடனிருந்த பார்வதிதேவியார் அப்படியே சிவபெருமானின் தொண்டையை அழுத்தி பிடித்தார். அந்த இடம் கருநீல கண்டமாக மாறியது. இதனாலேயே சிவனை நீலகண்டன் என்ற பெயர் கொண்டு அழைக்கிறோம்.

அந்த விஷத்தின் மயக்கம் போக பார்வதியின் மடியில் சிறிதுநேரம் தலைவைத்து சாய்ந்தார் சிவபெருமான்.

இன்று கூட விஷம் குடித்தவர்களை சிறிது நேரமாவது உறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக பாம்பு கடித்தவர்களை உறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவ விதி இருக்கிறதாம்.

ஆகவே பக்தர்கள் அனைவரும் கண்கொட்டாமல் சிவபெருமானை பாதுகாத்தார்கள்.

ஆகையால் தான் இன்றும் பக்தர்கள் அந்த நாளை நினைவு கூறும் வகையில் இரவு முழுவதும் கண்கொட்டாமல் சிவபெருமானுடைய அபிஷேக ஆராதனைகளை கண்டுகளித்து முக்தியை நாடுகிறார்கள்.

இந்த சிவராத்திரிக்கு மற்றுமொரு காரணமாக நாம் பலரும் அறிந்த பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் மூவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை தான் காரணமாக கூறப்படுகிறது.

மூவரில் யார் பெரியவர் என்கின்ற பேச்சு எழுந்த போது சிவபெருமான் விஸ்வரூப காட்சி அளித்து யார் தனது அடி முடியை காண்கிறாரோ அவரே பெரியவர் என்று அறிவித்தார்.

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து மண்ணைத் தோண்டி சிவபெருமானின் பாதத்தை காண முற்பட்டார்.

பிரம்மாவோ அன்னபட்சி ரூபம் கொண்டு , சிவபெருமானின் கிரீடத்தை தேடி பறந்தார்.

பிரம்மா விஷ்ணு இருவராலும் அவர்களின் நோக்கத்தை நிறைவு செய்ய முடியவில்லை.

சிவபெருமான் அவ்விருவருக்கும், அனைவருக்கும் சேர்த்து விஸ்வரூப தரிசனமும் லிங்கோத்பவ தரிசனமும் அர்த்தநாதீஸ்வரர் தரிசனமும் வழங்கினார்.

அந்த லிங்கோத்பவ புண்ணியகாலம் சிவராத்திரியன்று மூன்றாவது காலமாக கொண்டாடப்படுகிறது.

12ஆம் தேதி காலை 12: 30 மணி முதல் 03.30 மணி வரை கொண்டாடப்படும் லிங்கோத்பவ காலமே சிவராத்திரி பூஜையில் மிக மிக முக்கியமானது.

அதை கண்டு களிக்க பக்தர்கள் திரண்டு கோவிலுக்கு சென்று , ஆனந்த கூத்தாடுவர்.

சா.ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *