கேரளாவில் கனமழை காரணமாக, நள்ளிரவில் அணை திறக்கப்பட்டதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்தச் சூழலில், நேற்று நள்ளிரவு இடியுடன், கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால், மூழியாறு அணையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில், கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
இந்நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மூழியாறு அணையின் மூன்று ஷட்டர்கள் நள்ளிரவில் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் நீர் காரணமாக, கவி மற்றும் பம்பை ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த பின், ஷட்டர்கள் மூடப்படும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.