
ஜூன் 5 அன்று, அமெரிக்க நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் அவர்களின் பயணம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக அவர்கள் ஜூன் 5 ஆம் தேதி போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு ஜூன் 6 ஆம் தேதி விண்வெளி நிலையத்தை வந்தடைந்தனர்.
இது 8-10 நாள் பயண திட்டம் மட்டுமே ஆகும். ஆனால், தற்போது மேலும் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக அவர்களின் பயணம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், பூமியின் சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக இயங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
இப்போது, அவர்கள் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்று உலகமே காத்திருக்கிறது. இது குறித்து நாசா கூறியது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவதற்கு தகுதியற்றதாக கருதப்பட்டால், அவை ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்திற்கு மாற்றப்படும், எனவே இது பிப்ரவரி மாதத்தில் பூமிக்கு திரும்பும். ஸ்பேஸ்எக்ஸ் எலோன் மஸ்க்கின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஒன்பது விண்வெளி வீரர்கள் உள்ளனர். கூடுதலாக, விண்வெளி மையத்தில் அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் இதர தேவையான பொருட்கள் உள்ளன. அவர்கள் விரைவில் பத்திரமாக பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ்க்கு இது மூன்றாவது விண்வெளி பயணம் ஆகும். இவர் ஏற்கனவே 300 க்கும் மேற்பட்ட நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

