கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மற்றும் மருத்துவமனை தாக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் ஆகஸ்ட் 17ம் தேதி 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி இரவுப்பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
சிபிஐ விசாரணையை தொடங்கிய நிலையில், நேற்று, குறிப்பிட்ட மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் அனைத்து ஆவணங்களையும், தடயங்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மருத்துவ மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர். நாடு முழுவதும் நாளை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவ சங்கம், இந்த வேலைநிறுத்தத்தால் அடிப்படை மருத்துவ சேவைகள் ஏதும் பாதிக்கப்படாது, ஆனால் புறநேயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைகளை செய்ய மாட்டோம் என அறிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் அறிக்கை வாயிலாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
