அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி (Tariff) விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது, ஹாலிவுட் சர்வதேச அளவில் வணிகம் செய்யும் முறையைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தச் சட்டத்தின் கீழ் டிரம்ப் இந்த சுங்கவரிகளைக் கொண்டு வருவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் கேள்விக்கு வெள்ளை மாளிகை உடனடியாகப் பதிலளிக்கவில்லை. மேலும், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி, காம்காஸ்ட், பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட திரைப்பட நிறுவனங்களும் பதிலளிக்கவில்லை. இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் 1.5% சரிந்தன. ஹாலிவுட் அல்லாத பிற அனைத்து படங்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்பதால், ட்ரம்ப்பின் இந்த முடிவு பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரிக்கும் இந்திய திரைப்படத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிகிறது. இந்திய படங்களுக்கான வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் அமெரிக்கா 40% பங்களிப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
