இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டவிஸ்டோக் சதுரத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைந்துள்ளது. தியான நிலையில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ஒரு அடையாளமாக போற்றப்படுகிறது. ஆனால், நேற்று இந்த சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள பகுதியில் காந்தி, மோடி இந்திய பயங்கரவாதிகள் என எழுதப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, லண்டனில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அஹிம்சை தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு, அஹிம்சை கருத்து மற்றும் காந்தியின் மரபு மீதான வன்முறைத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்தியா முறைப்படி புகார் அளித்துள்ளதுடன், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை உடனடியாகச் சீரமைக்கவும் வலியுறுத்தியுள்ளது.

