பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கான புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்த கல்வி ஆண்டு முதல் (2023-2024) நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும்.மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் 02.08.2023 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துக்கள் கேட்டு தீர்வு காணப்படும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, தொழில் முனைவு மற்றும் திறன்மேம்பாட்டு அம்சங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இம்மாதிரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

