Air Purifier-களுக்கு 18% GST அவசியமா? – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

ஆரோக்கியம் இந்தியா சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் நீதி மன்றம்

டெல்லியில் கடுமையாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், காற்று சுத்திகரிப்பு கருவிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டி வரியை நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததை டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.காற்று சுத்திகரிப்பு கருவிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும் என்றும், அவற்றை மருத்துவ சாதனங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும், இந்நிலையில் காற்று சுத்திகரிப்பு கருவிகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று சுத்திகரிப்பான்களை ஆடம்பரப் பொருட்களாக கருத முடியாது என்றும், சுத்தமான காற்று குடிமக்களின் அடிப்படை உரிமை என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.சுத்தமான காற்றை வழங்க ஒன்றிய அரசு தவறியிருப்பது வருத்தம் அளிப்பதாகவும், நச்சுக் காற்றிலிருந்து அடிப்படை பாதுகாப்பு கூட இல்லாமல் மக்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பள்ளிகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் தற்காலிகமானவை மட்டுமே; அவை நிரந்தர தீர்வாகாது என்றும் கூறப்பட்டது.காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நீண்டகால தீர்வுகளுக்கான தெளிவான மற்றும் விரிவான திட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்தி, காற்று சுத்திகரிப்பு கருவிகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *