இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட விமான சேவை ரத்து மற்றும் தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்த வவுச்சர்கள் டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்கப்படுவதுடன், அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த வவுச்சர்கள், விமான சேவை தாமதம் மற்றும் ரத்து காரணமாக அரசு விதிகளின்படி பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உள்ள இழப்பீடு தொகைக்கு மேலாக, கூடுதலாக இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் நிவாரணமாகும். பயணிகளின் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வவுச்சர்களை முன்பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் இண்டிகோ செயலி மூலம் பெறலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான சேவை சீராக நடைபெற எதிர்காலத்தில் கூடுதல் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இண்டிகோ கூறியுள்ளது.

