கம்போடியா நாட்டில் சட்டவிரோதக் கும்பலிடம் தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருவதாக தாயகம் திரும்பிய சையது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் ஐடி வேலை எனக்கூறி அழைத்துச் செல்லப்பட்ட 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள், மியன்மார் நாட்டில் சட்டவிரோதக் கும்பலிடம் சிக்கியது.
தங்களை மீட்கக் கோரி அவர்கள் வெளியிட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி அரசின் முயற்சியால், 13 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கம்போடியா நாட்டிலும் இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இதனை கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சையது இப்ராகிம் உறுதி செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சையது இப்ராஹிம், கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து கம்போடியா நாட்டிற்குச் சென்றதாகவும் திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் அங்கு தன்னை அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.
“கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்னை 4,000 டாலருக்கு விற்பனை செய்தார். அங்கு எனக்கு உரிய வேலை ஏதும் கொடுக்கப்படவில்லை.
ஆயிரம் டாலர் சம்பளம் கொடுப்பேன் என்று கூறிவிட்டு, சம்பளம் கொடுக்காமல் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் என்னை ஈடுபட கட்டாயப்படுத்தினர்.
“இது குறித்து முதலில் திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினருக்கு தகவல் தெரிவித்தேன். பல்வேறு முயற்சிகளுக்கு இடையே எஸ்டிபிஐ கட்சியினரின் உதவியுடன் திருச்சி வந்து சேர்ந்தேன்,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கம்போடியாவில் தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் சிக்கித்தவித்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
சமூக விரோத செயல்களை செய்யவில்லை என்றால் அடிப்பது, உணவு கொடுக்க மறுப்பது, மின்சாரத்தை உடலில் பாய்ச்சுவது போன்ற கொடுமைகளை செய்வதாகவும் கூறினார்.
“இதுபோன்ற கொடுமைகள் செய்யும் காணொளி என்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டு கின்றனர்.
“இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச அஞ்சு கின்றனர். இப்போது இந்திய தூதரக அதிகாரிகள் மீட்பதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர்,” என்று சையது இப்ராஹிம் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மியன்மாரில் இருந்து முதல் கட்டமாக 13 பேர் மீட்கப்பட்டு புதன்கிழமை காலை சென்னை வந்துசேர்ந்தனர். அவர்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றுள்ளார்.
ஐம்பது தமிழர்கள் உட்பட 300 பேர் தாய்லாந்திலும் மியன்மாரிலும் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இது தொடர்பில் பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தார். இதை யடுத்து இந்தியர்கள் கட்டம் கட்டமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஆள்கடத்தல் கும்பல்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் இந்தியர்களை கடத்த முயற்சிப்பதால் போலி வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.
இதனால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளையர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டது