இந்தியாவில் ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வந்த நிலையில், பருவமழையின் வருகை மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக விவசாயிகள் இந்த மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 3 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவாகி வரும் புயல் மற்றும் லட்சத்தீவு அருகே நிலவிய சூறாவளி சுழற்சி ஆகியவை இந்த தாமதத்திற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.கேரளாவில் தொடங்கியுள்ள பருவமழை, அடுத்த சில வாரங்களில் வடக்கு நோக்கி நகர்ந்து ஜூலை 15-க்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வரும் நாட்களில் கேரளாவின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தின் சில மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

