தமிழ் திரையுலகை உலக அளவில் இசையின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இளையராஜா. இசைஞானி என கொண்டாடப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு படம் தற்போது உருவாகிறது.
அந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் ராக்கி, சாணிக் காகிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
இளையராஜா தி கிங் ஆப் மியூசிக் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இளையராஜா படத்தை கமல்ஹாசன் அறிமுகம் செய்தார்.
இளையராஜா படத்தை அறிமுகம் செய்து பேசிய கமல்ஹாசன் இளையராஜாவுடன் தன்னுடைய பயணத்தை பற்றி சில நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இளையராஜா வாழ்க்கையை 8 பாகங்களாக எடுக்கலாம் என பெருமிதம் கொண்டார்.
நடிகர் தனுஷ் பேசுகையில் இளையராஜாவின் பக்தன் நான் என கூறினார். அத்துடன் இளையராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களில் மட்டுமே நான் நடிக்க விரும்பினேன். நாம் என்ன நினைக்கிறோமோ, அது நிச்சயம் நடக்கும். ஒவ்வொரு நாளும் இளையராஜாவாக நடிக்க வேண்டும் என நினைத்து விட்டுதான் தூங்குவேன். இன்று அது நடந்துள்ளது. இளையராஜாவாக நடிப்பது எனக்கு கர்வமாக இருக்கிறது என தனுஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது என கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதை படக்குழுவினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது. மேலும் இளையராஜா வாழ்க்கையில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

