வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ட் என்ற புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்த வகையில் மெட்டா நிறுவனமும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
மேலும் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் மெட்டா நிறுவனம் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்குதல், இமேஜ் மற்றும் GIF உருவாக்கம் என பலவற்றை நம்மால் செய்ய இயலும்.
இந்நிலையில் வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ட் என்ற புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டிராய்டு போன்களில் மட்டும் இந்த புதிய அப்டேட் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை அப்படியே எழுத்தாக மாற்ற முடியும்.
முதல்கட்டமாக ஆங்கிலம், ஸ்பேனிஷ், போர்ச்சுகீசிய மொழி, ரஷ்ய மொழி, மற்றும் இந்தியில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.
இந்த வசதியை கணினியில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட்டில் வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ட் வசதி அப்டேட் கிடைத்ததும், அதை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். வாய்ஸ் நோட்டில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது அதன் கீழே விருப்ப மொழியில், எழுத்துவடிவில் கிடைக்கும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. அதேநேரம் இந்தியாவில் தற்போது இந்தியில் மட்டுமே இந்த வசதி வெளியாகியுள்ளது.

