நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

இந்தியா சிறப்பு சினிமா செய்திகள்

இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டும் , கொலை மிரட்டல் விட்ட நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சல்மான் கானின் மேலாளரை ஒரு மர்ம நபர் செல்போன் மூலம் அணுகி, தன்னை பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரராக அறிமுகப்படுத்தி, ரூ. 5 கோடி வழங்காதால் சல்மான் கானை மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கே போன்ற முறையில் கொல்லுவேன் என மிரட்டியுள்ளார். இதற்குப் பிறகு, சல்மான் கான் தரப்பில் நவி மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்கள், செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் போது, சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை கர்நாடக மாநிலம் ஹாவேரியில் வசிக்கும் பிகாராம் (33) என்பவர் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்தது. நவி மும்பை போலீசாரால் கர்நாடக போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், கர்நாடக போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக ஹூப்ளியில் வாழ்ந்த ராஜஸ்தானை சேர்ந்த பிகாராமை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர். அவர் கூலி வேலை செய்து வந்ததாகவும், விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அந்த நபரை நவி மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கூறியதாவது, “பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இவருடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. அவர் தனது சகோதரர் என பொய் கூறியுள்ளார். மேலும், தனது நண்பர்களிடம் சவால் விடுத்து தவறாக செல்போனில் பேசிவிட்டதாகவும் கூறினார். இருப்பினும், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.இந்தி நடிகர் ஷாருக் கானுக்கும் தொலைபேசியில் நேற்று ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்திற்கான புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத அந்த நபருக்கு எதிராக மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, போலீசாரால் இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *